என் நினைவுகள்.....!
ஒரு பயணம்!
என் நினைவுகள்! அது 1986 அல்லது 1987 ஆண்டாக இருக்க வேண்டும்.எனக்கு ஒரு ஒன்பது வயது இருக்கும். பள்ளி இறுதி ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது.நான் ஐந்தாம் வகுப்பில் படித்ததாக ஞாபகம். அப்படியெல்லாம் பள்ளி விடுமுறை நாட்களில் அக்கம் பக்கம் எங்கள் வயதை ஒத்த மற்றும் உறவுக்கார குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது ஒரு அலாதியான சந்தோசமான தருணங்கள்.தாயம்,கபடி,கிரிகெட்...வயல் வெளியில் சுற்றி திரிவது ஓடி ஆடி விளையாடுவது, திருடன் போலீஸ் கண்ணாமூச்சி ஆடுவது, அருகில் இருந்த கோவில்களில் விளையாடி திரிவது போன்ற சந்தோசமான நாட்கள் என் அசைவுகளில் iஅவ்வப்போது வந்து பொது உண்டு.அப்போது நான் மற்றும் எனது அத்தை மகனுடன் அந்த வருடம் காஞ்சிபுரம் அருகே உள்ள மாமண்டூர் கிராமத்தில் விடுமுறையை கழித்த நினைவுகளை இப்போது பகிர்தலே என் நினைவுகள்! அந்த மாமண்டூர் கிராமத்திற்கு பயணம் செய்தது எப்படி என்றால் அங்கே எங்களுக்கு சொந்தமான எனது தாத்தா மறைந்த பச்சையப்பாகவுண்டரால் நிர்வகித்து வந்த வாத்து பண்ணைகள் இருந்தன. அந்த பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்படும் முட்டைகள் சேகரித்து எங்களது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கேரளா மாநிலம் அனுப்பி வைக்கம்படும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் கோபிசெட்டிபாளையத்தில் இருந்த மறைந்த எனது தந்தையாரால் நிர்வகிக்கப்பட்டன். இந்த வியாபார அமைப்பு அப்போது மிகப்பெரிய கட்டமைப்புகளுடன் செயல்பட்டது. பண்ணைகளுக்கு ஆட்கள், கணக்கு வழக்கு பார்க்க கணக்கு பிள்ளைகள், பொருட்கள் ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு பயணம் செய்ய சரக்கு வாகனங்கள் அதற்கான ஓட்டுனர்கள், நிர்வாகிகள் என பலத்த கட்டமைப்புகளுடன் இருந்த குடும்ப தொழிலாகும். பள்ளி விடுமுறை நாட்களில் நாங்கள் எங்கள் சரக்கு வாகனங்கள் பயணிக்கும் ஊர்களுக்கு நாங்கள் அந்த லாரி யில் பயணம் செய்வது மிகுந்த சந்தோஷத்தை தரும்.அப்போது மாமண்டூர் கிராமத்தில் வாத்து பண்ணைகள் முகாமிட்டு இருந்த நேரத்தில் நாங்கள் பயணம் செய்ததை என் நினைவுகளாக பகிர்ந்து கொள்கின்றேன். சுற்றுலா வோ, வெளி இடங்களுக்கு பயணங்கள் செய்ய எங்களுக்கு சுலபமாக எல்லாம் எங்கள் வீட்டில் அனுமதி கிடைத்து விடாது. மிகுந்த கன்டிப்புகளுடன் வளர்ந்த நாங்கள் தேவையான அத்தியாவசிய ம் இருந்தால் ஒழிய பயணங்களுக்கான அனுமதி கிடைக்காது. இருந்தும் அந்த ஆண்டு சில காரணங்களால் பயணம் செய்ய அனுமதி கிடைத்தது. இரண்டு மூன்று நாட்கள் வெளியூர் பயணிக்கப் போகின்றோம் என்ற சந்தோசமாக கழிந்தது. அடுத்த நாள் நாங்கள் பயணம் செய்ய வேண்டிய நாள். எங்களுக்கு தேவையான துணி கள் இதர பொருட்கள் அனைத்தும் தயார் செய்து என் அம்மா கொடுத்தார்கள். என்னுடன் எனது அத்தை மகன் மற்றும் எங்களுடைய தாத்தா அவர்களுடன் அன்றைய பயணம் துவங்கியது. அன்று மாலை ஐந்து மணி அளவில் நாங்கள் பிரயாணம் செய்ய வேண்டிய லாரி எங்கள் வீட்டின் முன் வந்து நின்றது. அனைவரும் அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டோம். எங்கள் உடமைகளை தகுந்த இடங்களில் வைத்து கொண்டோம். எங்களது பயணம் இனிதே துவங்கியது. முதலில் எங்கள் வாகனம் எங்கள்வ வீட்டில் இருந்து புறப்பட்டு எரிபொருள் நிரப்பும் பெட்ரோல் பங்கிற்கு சென்றது. அந்த பெட்ரோல் பம்ப் எங்கள் அனைத்து வாகனங்களும் டீசல் நிரப்பும் இடமானதால் அது எங்களுக்கு மிகவும் பரிச்சயமான இடமாகும். எரிபொருள் நிரப்பிய பின் வாகனம் புறப்பட்டது எங்கள் ஊரில் இருந்து ஈரோடு நகரை நோக்கி. எங்கள் ஊரின் எல்லையில் இருந்த கருப்பராயன் கோவிலில் வாகனம் நிறுத்தபட்டு பூஜை செய்துவிட்டு மீண்டும் வாகனம் புறப்பட்டது. ஊரின் எல்லைகளை கடந்து சிறு சிறு கிராமங்களை கடந்து ஈரோடு சாலையில் சேலம் நோக்கி நகர்ந்தது. சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டே பிரயாணம் செய்வது ஒரு இனியையான நிகழ்வாகும் .இரண்டு மூன்று மணி நேரத்திற்கு பிறகு வாகனம் சேலம் நகரில் பேருந்து நிலையம் அருகே நின்றது. எங்கள் லாரி ஓட்டுனர் வாகனத்தை ஒரு உணவகம் முன்பு நிறுத்தினார். இரவு 8.00 மணி இருக்கும். இரவு உணவு முடித்து கொண்டு மீண்டும் வாகனம் புறப்பட்டது. சேலம் நகரை இரவு வெளிச்சத்தில் கண்டு களித்தோம். பின் நகரின் எல்லைகளை கடந்து லாரி விழுப்புரம் நகரை நோக்கி பயணம் செய்தது .இரவு நேரத்தில் முகப்பு விளக்குகளை போட்ட வாகனங்கள் எதிரெதிர் வாகனங்களை கடந்து சென்று கொண்டிருந்தோம். இரவு நெடுநேரம் ஆகி விட்டது நாங்கள் சிறுவர்கள் ஆனதால் தூக்கம் வந்துவிட்டது. லாரியில் இருந்த குஷன் படுக்கையில் நான் படுத்து உறங்கி விட்டேன். காலை விடிந்தவுடன் ஒரு நகரத்தின் சப்தமான சூழ்நிலையில் எங்களுடைய ஓட்டுநர் நின்று கொண்டிருந்த வாகனத்தில் எழுப்பினார்கள். அந்த ஊர் விழுப்புரம் என்று சொன்னார்கள். பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து இறக்கி அருகில் இருந்த ஒரு தேநீர் கடைக்கு அழைத்து செல்லப்பட்டோம். அனைவருக்கும் தேநீர் வாங்கி கொடுத்தார்கள். பின் மீண்டும் லாரி கொஞ்ச தூரம் எங்களை அழைத்து சென்று ஒரு பெரிய லாடஜ் முன்பு நின்றது. அங்கே எங்களுக்கு அலுவலமாக நிரந்தர அறை ஒன்று வாடகைக்கு எடுத்து இருந்தார்கள். நாங்கள் அங்கே எங்கள் அறைக்கு அழைத்து செல்லப்பட்டோம். நான் மற்றும் எனது அத்தை மகன் மற்றும் தாத்தா ஆகியோர் எங்கள் உடமைகளுடன் அந்த அறைக்குள் சென்றோம். பின் நாங்கள் குளித்து தயார் ஆகினோம். பின் காலை உனவுக்காக எங்கள் வாகன ஓட்டுனர் அருகில் இருந்த உணவு விடுதிக்கு அழைத்து சென்றார்கள். இட்லி சாப்பிட்டதாக நினைவு. பின் நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு சென்றோம். அந்த விடுதி முன் ஏதோ ஒரு செடி வகை சிறிய குடில் போல் அமைத்து இருந்தார்கள். அதன் உள்ளே சென்றால் குளிர்ச்சியுடன் இருந்தது. அந்த விடுதி இப்பொழுது இயங்குகிறதா என்று தெரியவில்லை.இங்கே குறிப்பாக நான் முதன் முதலாக சைக்கிள் ரிக் ஷா வாகனத்தை அப்போது தான் முதன்முதலாக பார்க்கின்றேன். நிறைய ரிக்சாக்கள் குறுக்கும் நெடுக்கமுமாக ஓடி கொண்டு இருந்தன. அவற்றை பார்த்து கொண்டே சிறிது நேரம் ஓடியது. பின் நாங்கள் அனைவரும் விழுப்புரம் நகரில் இருந்து மாமண்டூர் கிராமத்திற்கு பயணம் புறப்பட்டோம். எங்களது உடமைகளை நாங்கள் எடுத்து கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். வாகனம் புறப்பட்டது. ஏதேதோ கிரமம் நகரங்களை கடந்து சென்றது. மதிய உணவு சாப்பிட ஒரு பெரிய ஓட்டலில் வாகனம் நிறுத்தப்பட்டது.எங்களுக்கு மதிய உணவு வாங்கி கொடுத்தார்கள். பின் நாங்கள் மீண்டும் பயணத்தை துவக்கினோம். இடையே திண்டிவனம்,செய்யாறு என்ற நகரங்களை கடந்தது நினைவில் உள்ளது. ஏதோ ஒரு இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு வாகனம் நின்றதும் நினைவில் உள்ளது. மாலை நேரத்தில் ஒரு இடத்தில் டீ அருந்த லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். மற்றவர்கள் டீ அருந்த நான் அங்கே ஏதோ ஒரு குளிர்பானம் அதுதான் வேண்டும் என்று அடம்பிடித்து சாப்பிட்டது நினைவில் உள்ளது. பின்னர் மீண்டும் வாகனம் புறப்பட்டது மாலை வாகனம் மாமண்டூர் கிராமத்தை சென்றடைந்தது. ஊரின் முன்பு ஒரு பாசன வாய்க்கால், சுற்றிலும் நெல் வயல்கள், அறுவடை நடந்த வயல் வெளிகளை பார்த்து கொண்டே அந்த ஊரை அடைந்தோம். நாங்கள் அங்கே பஞ்சாயத்து தலைவர் அவர்களின் வீட்டின் மாடியில் இருந்த ஒர் அறையில் தங்க வைக்கப்பட்டோம். அந்த வீட்டின் ஒரு பகுதி முழுவதும் எங்கள் நிறுவன அலுவலகமாக பயன்படுத்தி கொண்டு இருந்தார்கள். அந்த வீடு முன் பகுதி மாடி வீடாகவும் பின் புறமாக மிகப் பெரிய களமுமாக இருந்த வீடாகும். இரவு நெருங்கி கொண்டு இருந்தது அன்றைய இரவு நான் என்ன காரணம் என்று தெரிய வில்லை லாரியின் கேபின் பகுதியில் ஓட்டுனருடன் வந்து படுத்து உறங்கி விட்டேன். அடுத்த நாள் கண் விழிக்கும் போது சுற்றிலும் பனி பெய்து கொண்டிருந்தது! மிக குளிரச்சியாக இருந்தது. பின் நான் அலுவலக அறைக்கு சென்று காலை கடன்களை முடித்துக் கொண்டு! நாங்கள் காலை உணவு அருந்த ஒரு ஓட்டலுக்கு அழைத்து செல்லபட்டோம்! அது ஓட்டல் இல்லை தென்னை ஓலையால் மறைத்து கட்டப்பட்ட மிக சிறிய கடை. அங்கே கூட்டம் களைகட்டி இருந்தது.சிறிது நேரத்தில் இடம் கிடைத்தது. அந்த கிராமத்தில் விவசாயமே பிரதானமாக இருந்ததால் சாப்பிட்டு விட்டு அவரவர்கள் ஏதோ வேலை செய்ய சென்று கொண்டே இருந்தார்கள். நாங்கள் கொங்கு பகுதியில் பேசும் தமிழ். அங்கே சென்னை அவர்கள் பேசும் தமிழ் சொற்கள் வித்யாசமாக இருந்தது அவற்றை எல்லாம் கேட்க எனக்கு வித்தியாசமாக இருந்தது. மந்தார இலையில் முதலில் இட்லி வைத்தார்கள். தொட்டு கொள்ள சுண்டல் குழம்பு ஊற்றினார்கள். அந்த சுண்டல் குழம்பின் ருசி இன்றும் நினைவில் அப்படியே உள்ளது. அந்த குழம்பில் தோசையை வைத்து சாப்பிட்டதும் நினைவில் அப்படியே உள்ளது. பின் எங்கள் தாத்தா அவர்களுக்கு சாப்பிட பார்சல் வாங்கி கொண்டு எங்கள் அறைக்குள் சென்றோம். மாமண்டூர் கிராமம் இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை அப்போது சுற்றிலும் வயல் வெளிகள், ஏரி பாசனம், எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பிய வயல்கள், நெல் அறுவடை முடிந்த வைக்கோல்கள் சிதறி கிடக்கும், டயர் வைத்த மாட்டு வண்டிகள், காலை மற்றும் மாலையில் பால் கறந்து கொண்டு சொசைட்டியில் பால் ஊற்றி கொண்டிருக்கும் மக்கள், ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள், எருமைகள், நான்கு ஐந்து பேருந்துகள் சாலையில் அவ்வப்போது ஓடிக்கொண்டு சுற்றிலும் விவசாயம் சம்பந்தமான நடவடிக்கை மட்டுமே நடந்து கொண்டிருந்த ஒரு முழுமையான கிராமமாக அப்போது தெரிந்தது. தூசி என்ற சிறிய அளவிலான இடமும் மாமண்டூர் என்ற சுமார் ஒரு கிமீ தூரத்தில் அருகருகே அமைந்த கிராமங்களே அவ்வப்போது தூசிமாமண்டூர் என்றும் அழைத்தார்கள். இரண்டு ஊர்களுக்கு இடையில் ஒரு தொடக்க பள்ளி ஒன்று இருந்தது. அந்த பள்ளியின் சில பகுதிகள் எங்கள் தாத்தா அவர்களால் கட்டி கொடுக்கப்பட்டது.அந்த கிராமத்தில் வாத்து பண்ணைகள் அமைத்து கொள்ள அந்த கிராமத்திற்கு குத்தகைக்கு ஏலம் எடுத்து கொண்டு அறுவடை முடிந்து குறிப்பிட்ட காலத்தில் பண்ணைகள் அமைத்து கொண்டிருப்பார்கள்.மேய்சல் முடிந்த பின் அடுத்த அறுவடை நகரங்களை நோக்கி சென்று விடுவார்கள். அன்று மதியம் நாங்கள் பஞ்சாயத்து பிரசிடென்ட் அவர்களின் வீட்டில் எங்களுக்கு விருந்தளித்து உபசரித்தார்கள். எங்கள் தாத்தா அவர்கள் நிர்வாக பணிகளை முடுக்கி விட்டு வரவு செலவு பணிகளை மேற்கொண்டு இருந்தார்கள். பண்ணை ஆட்கள் வருவதும் போவதுமாக, யார் யாரோ அவருடன் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் எங்கள் லாரி ஓட்டுனர் பெயர் மணி என்று நினைக்கிறேன் அவருடைய பொறுப்பில் விடப்பட்டு ஊர் சுற்றி காட்ட சொல்லப்பட்டது. சில இடங்களுக்கு அழைத்துச் சென்று வேடிக்கை பார்த்தோம். இப்படியே ஒன்றிரண்டு நாட்கள் கழிந்தது. மாலை வேளைகளில் அந்த குறிப்பிட்ட பள்ளியின் காம்பவுண்ட் சுவற்றில் உட்கார்ந்து கொண்டு அந்த கிராமத்தின் ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதே சந்தோஷமாக கழிந்தது. அடுத்த நாள் அங்கிருந்து பக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஊர் சென்று கோவிலுக்கு கூட்டி செல்வதாக கூறினார். எங்களது ஓட்டுநர் அவருடைய பெயர் பாஸ்கரன் அவர் எங்களை அழைத்து கொண்டு காஞ்சிபுரம் நகரை நோக்கி பேருந்தில் பயணம் செய்தோம். அங்கே கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டது முற்றத்தை சுற்றியது, காமாட்சி படம் பொரித்த சாமி படம் வாங்கியது எல்லாம் அப்படியே நினைவில் உள்ளது. பின் நாங்கள் மாமண்டூர் கிராமத்திற்கு வந்து விட்டோம். அடுத்த நாள் எங்கள் வாகன ஓட்டுனர் மணி ஏரியில் போய் குளித்துவிட்டு வரலாம் என்று கூறி எங்களை அழைத்து கொண்டு போனார்கள். அங்கிருந்து ஒரு சைக்கிள் வாங்கி கொண்டு என்னை அழைத்து கொண்டு சென்றார் அப்போது வானம் கொஞ்சம் கருக்கலாக இருந்தது நேரம் செல்ல செல்ல கன மழையாக வந்து விட்டது. நாங்கள் ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றோம் அது சென்னை செல்லும் நெடுஞ்சாலையாக இருப்பதால் வாகனங்கள் மழையில் ஊர்ந்து சென்றன. நாங்கள் அங்கிருந்து பக்கத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் அடியே சென்று நின்று கொண்டோம். அங்கே சிலர் வயல் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தவர்கள் நின்றிருந்தார்கள். மழை சூராவளி காற்றுடன் கனமழை பெய்ததால் சிறிய அளவிலான ஒரு மரம் வேறோடு பிடுங்கி எறிந்து விட்டது. கொஞ்சம் நேரத்தில் மழை நின்று விட்டது. நாங்கள் ஏரிக்கு செல்ல முடியாமல் அங்கிருந்த வாய்காலிலேயே குளித்து விட்டு மீண்டும் எங்கள் அறைக்கு சென்று விட்டோம் அன்றைய தினம் அவ்வாறு கழிந்தது. பின் அடுத்த நாள் மதியம் எங்களுடைய தாத்தா மதிய உணவு மாமிசம் சாப்பிட எங்கள் சிப்பந்தி ஒருவரிடம் பணம் கொடுத்து காஞ்சிபுரம் சென்று ஏதோ ஒரு ஹோட்டலில் பார்சல் உணவு வாங்கி வர செய்தார்கள். அன்றைய மதியம் அங்கிருந்த வீட்டில் மிகப்பெரிய வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறினார்கள். மிகப்பெரிய தூக்கு பாத்திரத்தில் நிறைய வகையான கறி, மீன் வகைகள் வாங்கி வந்து இருந்தார்கள். பின் நாங்கள் உணவு உண்ட பின் அங்கிருந்தவர்கள் அனைவரையும் சாப்பிட வைத்தார்கள். பின் ஏதோ விவகாரத்தில் என் தாத்தா அவர்கள் அன்று பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார்கள். அன்றைய கோடை கால விடுமுறை என்பதால் தான் நாங்கள் அப்போது இந்த சுற்றுலா செல்ல அனுமதி கிடைத்தது. நாங்கள் அங்கே தங்கி இருந்த நாட்களில் அப்போது பனை நுங்கு சாப்பிட நாங்கள் இருந்த பஞ்சாயத்து தலைவர் அவர்களின் பண்ணையில் இருந்து தினமும் மதியம் ஒருவர் பனை நுங்கு கொண்டு வந்து கொடுத்தார்கள். பின் நாங்கள் ஊருக்கு திரும்பி வரும் போது இரண்டு சாக்கு மூட்டையில் பனை நுங்கு கட்டி வைத்து அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது அருகில் உள்ள ஒரு கடையில் அண்ணாச்சி பழம் ஜூஸ் விற்பனை நடந்து கொண்டு இருந்தது. தினமும் மாலை நேரங்களில் நாங்கள் அந்த கடைக்கு சென்று ஐஸ் கட்டிகள் போட்ட அண்ணாச்சி பழ ஜூஸ்களை சுவைப்பதே வாடிக்கையானது. மதியம் மூன்று மணிக்கு ஜூஸ் சாப்பிட போவதையே வாடிக்கையாக கொண்டிருந்தோம். அப்பொழுது தான் மிக்சி சாதனம் அறிமுகம் வந்திருக்க வேண்டும் .அந்த கருவியை அப்பொழுது தான் நாங்கள் புதியதாக பார்த்தோம். இப்படியே அன்றைய வருட கோடை விடுமுறை பதினைந்து நாட்கள் மிகவும் சந்தோஷமாக அந்த கிராமத்தில் கழிந்தது.பின் நாங்கள் மாமண்டூர் கிராமத்தில் இருந்து விடைபெறும் நாள் முன்னதாக பஞ்சாயத்து தலைவர் அவர்களின் வீட்டில் ஒரு நாள் இரவு விருந்து அளித்தார்கள். பின்னர் நாங்கள் அந்த பதினைந்து நாட்கள் எங்களிடம் பழகியவர்களிடம் எல்லாம் சொல்லி விட்டு ஒரு நாள் மதியம் அந்த கிராமத்தில் இருந்து விடைபெற்றுக் கொண்டு எங்கள் பயணம் தொடங்கியது. நாங்கள் அன்றைய தினம் விழுப்புரம் வந்து அங்கிருந்த அலுவலகத்தில் தேங்கிய முட்டைகளை சேகரித்து கொண்டு பின் எங்கள் சொந்த ஊருக்கு செல்வதாக திட்டம். ஆனால் மாமண்டூர் கிராமத்தில் இருந்து விழுப்புரம் செல்வதற்குள் எங்கள் லாரியின் டயர் இரண்டு முறை பஞ்சர் ஆகி விட்டது. எங்களுடைய தாத்தா அவர்கள் வாகன ஓட்டிகள் மீது கடும் கோபம் அடைந்தார். வாகனத்தை சரியாக பராமரிக்க வேண்டும் என்று கடிந்து கொண்டது நினைவில் உள்ளது. பின் கொஞ்சம் சிரமப்பட்டு பஞ்சர் அடைத்து விழுப்புரம் நோக்கி வாகனம் புறப்பட்டது. விழுப்புரம் வரும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகி விட்டது. அன்றைய தினம் இரவு சாப்பாடு சாப்பிட எங்களை அழைத்தார்கள் ஏனோ மிகுந்த தூக்கத்தில் இருந்ததால் வேண்டாம் என்று சொல்லி விட்டு அப்படியே தூங்கி விட்டோம் .பின்னர் வாகனம் சரக்கு ஏற்றி பின் எங்கள் ஊர் கோபிசெட்டிபாளையம் நோக்கி புறப்பட்டது. சேலம் தாண்டி ஒரு இடத்தில் இரவு தேநீர் சாப்பிட வாகனம் நின்றது. அங்கு டீ குடித்ததாக ஞாபகம். பின் வாகன பயணத்தில் ஏதோ ஒரு இடத்தில் செக்போஸ்ட் இருந்தது அதை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்த வாகனம் மற்றொரு வாகனத்தில் உராய்ந்து வாகனங்கள் நின்று விட்டது பின் சிறிது நேரத்தில் வாகனங்கள் புறப்பட்டன. நாங்கள் அப்படியே வாகனந்தில் தூங்கி விட்டோம். பின் திடீரென விழித்து பார்த்த போது வாகனம் எங்கள் ஊரின் நுழைவு வாயில் ஆர்ச்சை கடந்து சென்று கொண்டிருந்தது. பின்னர் நாங்கள் எங்கள் உடைமைகளுடன் வீடுகளில் இறக்கி விடப்பட்டோம். பின் வாகனம் வேறு பகுதிக்கு புறப்பட்டு சென்று விட்டது. இவ்வாறு என்னுடைய பால்ய வயதில் ஒரு பயணம் செய்த நிகழ்வு என்னுடைய மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது. அவ்வப்போது ஏதேனும் சூழ்நிலையில் அந்த நிகழ்வுகளை அசை போடுவது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். அப்பொழுது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதற்கு பின் எல்லாம் அந்த மாதிரியான பயணம் செய்ய வாய்ப்பு எல்லாம் கிடைக்க வில்லை. ஒப்பிடுதல் : சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு என் மன ஓட்டத்தில் நீங்கா நினைவுகளாக இருக்கும் ஒரு பயணம்! அதை ஒப்பீடு செய்யும் போது அன்றைய காலகட்டத்தில் ஒரு இயல்பான பரபரப்பு இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கின்றோம். அப்போது பணியாளர்கள் ஒரு நிறுவனத்திற்கு எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தார்கள், அவர்களின் அக்கறை, உண்மையான உழைப்புகள் போன்றவற்றை தற்போதைய சூழ்நிலையில் ஒப்பிடவே முடியவில்லை.பரபரப்பு இல்லாத ஒரு இயல்பு நிலையில் மெதுவாக சாலையில் பயணம் செய்திருக்கின்றோம். இன்றைக்கு சாலையில் நூறு கி.மீ வேகத்திற்கு பயணம் செய்யும் வகையில் இருந்தாலும் அன்றைக்கு 40 கி.மீ வேகத்தில் பயணம் செய்த போது கிடைத்த சந்தோஷம் இப்போது கிடைப்பது இல்லை. அன்றைய காலகட்டத்தில் உணவு என்பது சிற்றுண்டி சாலைகளில் சாப்பிடும் போது கிடைத்த சுவை பல ஆயிரம் ரூபாய் செலவில் நட்சத்திர ஓட்டலில் இப்போது சாப்பிட்டாலும் கிடைப்பதில்லை. அந்த ஒரு சிறிய அளவிலான கடையில் தோசைக்கு சுண்டல் குழம்பு வைத்து சாப்பிட்டது, மதிய உணவு பார்சல் வாங்கி வந்து அசைவ உணவு சாப்பிட்டது எல்லாம் இன்றும் நாவில் அந்த சுவை உள்ளது.
வாராந்திர சந்தை!
எங்கள் ஊரில் ஒரு வாராந்திர சந்தை உள்ளது. சனி கிழமை கூடும் சந்தை ஆகும்.எங்கள் ஊரை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் உள்ள மக்களின் அன்றைய ஷாப்பிங் மால் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வாரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் அந்த ஒரே நாளில் வாங்கி கொள்வார்கள். சந்தைகள் வெள்ளிகிழமை காலையில் இருந்தே துவங்கி விடும். பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஒரு நாள் முன்பே கொண்டு வந்து இருப்பு வைப்பார்கள். அந்த பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய சந்தையும் இதுவே ஆகும். சனி கிழமை காலையில் நடக்கும் ஆடு மாடு சந்தையே மிகவும் பிரசித்தி பெற்றது. முதல் நாள் வெள்ளிகிழமையே ஆடு மாடுகள் கொண்டு வந்து கட்டி வைத்து விடியற்காலையில் வியாபாரம் நடக்கும். வியாபாரிகள், பொருள் வாங்குவது, கடைகள் கட்டுவதற்கு குச்சி கட்டுவது. அரிசி பருப்பு, காய்கறிகள் மூட்டைகளில் வந்து இறங்குவது, சிறிய அளவிலான ஓட்டல், வாழை தார்கள், போண்டா பஜ்ஜி கடைகள், என்று வெள்ளிகிழமை இரவுகளில் இருந்து பரபரபரப்பு தொற்றி கொள்ளும். காலை பதினொன்று மணிக்கு மேல் மாட்டு சந்தை முடிந்து விடும். அதன் பிறகு பொதுமக்கள் மளிகை பொருள் வாங்குவதற்கு வருவார்கள். இரவு ஏழு மணி வரை நடக்கும் அதன் பின் நிறைவடைந்து வியாபாரிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக மூட்டைகளில் கட்டி வேறு ஊருக்கு செல்லும் வாகனங்களுக்கு அனுப்பி விட்டு சென்று விடுவார்கள். அதன் பின் மக்கள் நடமாட்டம் குறைந்து விடும். ஆடு மாடு சந்தை வியாபாரிகள் கைகளில் துண்டு போட்டு மறைமுகமாக விலை பிடிப்பார்கள். அதை பார்ப்பதற்கு வித்யாசமான செயலாக இருக்கும். ஆடு மாடு சந்தை நடைபெறும் போது கைகளில் பிளாஸ்க் போன்ற ஒரு பாத்திரத்தில் தேநீர் வைத்து கொண்டு விற்பனை செய்வார்கள். அவர்கள் சந்தையின் எல்லா இடங்களிலும் சென்று கிளாஸ் களில் டீ ஊற்றி கொடுப்பார்கள். அதிகாலை நேரத்தில் வியாபாரிகள், கால்நடைகள் வாங்க வருபவர்கள் குடிப்பார்கள். ஒரு எட்டு மணி அளவில் ஒருவர் பாயாசம் விற்பனை செய்பவர் வருவார். அங்கே சந்தையின் மையத்தில் சிறிய அளவிலான ஓட்டல் நடக்கும். அங்கே இட்லி தோசையில் இருந்து அசைவ உணவு வரை கிடைக்கும். ஆடு மாடு சந்தை முடிந்தவுடன் அந்த சிற்றுன்டி இடங்கள் மதியத்திற்கு மேல் நிறுத்தி விடுவார்கள். ஏனெனில் வியாபாரிகள் சென்று விடுவார்கள். அதற்கு பின் யாரும் சாப்பிட வரமாட்டார்கள்.
எங்கள் ஊர் சந்தையின் அமைப்பு மூன்று பக்கம் வழிகள் கொண்டதாக இருக்கும். இரண்டு பக்கம் கோபிசெட்டிபாளையம் தாராபுரம் சாலையை ஒட்டியும் மற்றொரு வழி மொடச்சூர் கிராமத்தின் மற்றொரு பக்கம் இருக்கும்.
சந்தையின் நுழைவாயில் இரண்டு புறமும் காய்கறி நாற்று விற்பனை செய்வார்கள். தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் நாற்றுகள் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். விவசாயிகள் நாற்றுகள் வாங்கி செல்வார்கள். காய்கறி விவசாயம் செய்பவர்கள் விதை முளைத்து வளர்ந்து வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.மதியம் வரை இருப்பார்கள் அதற்கு மேல் சிலர் மாலையில் இருப்பார்கள். விற்பனை ஆகாமல் மீதமான நாற்றுகளை இரண்டாக வெட்டி எறிந்து சென்று விடுவார்கள். அதற்கு பக்கத்தில் சிறிய அளவில் துணி விற்பனை செய்யும் கடைகள் போட்டிருப்பார்கள்.பெண்களுக்கான உடைகள், குழந்தைகள் உடைகள் வைத்து விற்பனை செய்பவர்கள் கடை ஆகும்.சந்தையில் பொருள் வாங்கி விட்டு வெளியே வரும் பெண்கள் இந்த கடைகளில் தான் கூட்டமாக நின்று துணிகள் வாங்குவார்கள். துணி கடையை தான்டினால் தெற்கு பகுதியில் கதவை ஒட்டி நுழைவு வாயிலில் சந்தை வசூல் செய்யும் அறை இருக்கும். அதில் எப்போதும் இரண்டு மூன்று பேர் வசூல் செய்து கொண்டிருப்பார்கள். உள்ளே வரும் ஆடு மாடுகளில் இருந்து எதை விற்பனை செய்தாலும் சந்தை வரி வசூல் செய்து விடுவார்கள். அரிசி பருப்பு விற்பனை செய்பவர்களிடம் மொத்தமாக வசூல் செய்து கொள்வார்கள்.
Comments
Post a Comment